
மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை உணவு, உடை, உறையுள். தங்குவதற்கு இடமும் மானம் காப்பதற்கு உடையும் உடலோம்பி உயிரை நிலைநிறுத்துவதற்கு உணவும் அவசியமான சூழலில் இருக்கும் மனிதன் சரியான பொருத்த மான உணவை உண்ணாமல் "கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்றெண்ணி உடலுக்கு ஒவ்வாத உணவையும் தேவையில்லாத உணவையும் பாதுகாப்பான முறையில் செய்யப்படாத உணவையும் நாக்கு ருசி ஒன்றையே கருதி உண்டு உடலைக் கெடுத்து நோய் வாய்ப்பட்டு அல்லலுறுகிறான்.
பழங்காலத்தில் வாழ்ந்த சான்றோர்கள் மனித வாழ்க்கைக்கு ஏற்புடைய உணவையும் உண்ணும் முறையையும் இலக்கியங்கள் வாயிலாக எடுத்துரைத்துள்ள போதிலும் துரித கதியில் மனிதன் இயங்கி வரும் சூழலில் வாழ்க்கை நிலை மாற, அவற்றை மறந்தவனாக அம்முறையினின்றும் மாறியவனாக இருக்கும் தன்மையே இன்று நிலவி வருகிறது. இதிலிருந்து மீண்டு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு வழிகாட்டுவதாகச் சிறிய அளவிலான இந்நூல் அமைகிறது.